கோலாலம்பூர், 14 அக்டோபர் (பெர்னாமா) -- தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு அதற்கான தயார்நிலைகளில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சிக்கனத்தை நினைவில் கொண்டு செயல்படுவது சிறந்தது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் கொண்டாட்டம் என்றாலும், அத்தியாவசியத்தையும் ஆடம்பரத்தையும் வேறுபடுத்தி அதற்கு ஏற்ப செலவு செய்யுமாறு அச்சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பல்வேறு வகையிலான பாரம்பரிய பலகாரங்கள், புத்தாடை, பட்டாசு, அலங்கரிப்பு என்று பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கும்.
எனினும், அப்பட்டியலில் இருக்கும் பொருட்களை தேவைகளுக்கு ஏற்ப வாங்கி சிக்கனமான தீபாவளியை கொண்டாடினால், அநாவசிய செலவுகளை குறைக்க முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி & ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், கடன் வாங்கி தீபாவளியைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்காது என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார்.
''தீபாவளி என்றால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்றக் கட்டாயம் அல்ல. மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய ஒரு நாளுக்கு சிக்கனமாக இருந்து வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பண்டிகையைக் கொண்டாடினால் அதுவே ஒரு மகிழ்ச்சிதான். கடன் வாங்காமல் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்,'' என்றார் அவர்.
அதோடு, தீபாவளியின் போது அனைவரின் இல்லங்களிலும் மாமிசம் மற்றும் இனிப்பு வகையான உணவுகளுக்கு பஞ்சம் இருக்காது.
எனினும், சாப்பிடும் முறையில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், விருப்பபட்ட உணவுகளை சாப்பிடுவதோடு, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.
''குறிப்பாக, திருவிழா காலங்களில் அதிகம் சீனி சேர்க்கப்பட்ட உணவு வகைகள் அல்லது பானங்களை மக்கள் அருந்துகின்றனர். ஒரு நாள் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டு மெத்தனப் போக்குடன் இருக்கக் கூடாது,'' என்றார் அவர்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு, இந்த ஆண்டு தீபாவளியை ஆரோக்கியமான உணவு முறையுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அதோடு, தீபாவளிக்கு அநாவசிய செலவுகளைக் குறைத்து சேமிப்பைக் கடைப்பிடித்தால், தீபாவளிக்கு பிந்தைய செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)