ராஜஸ்தான், 15 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியா, ராஜஸ்தானில் உள்ள நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அதில் பயணித்த குறைந்தது 20 பேர் உயிரிழந்த வேளையில், மேலும் பலர் காயங்களுக்கு ஆளாகினர்.
பெரும்பாலான உடல்கள் முழுமையாகக் கருகிவிட்டதால் அடையாளம் காணும் செயல்முறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனை மாதிரிகள் மூலம் அடையாளம் காணும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் குளிர்சாதன வசதியும் படுத்துறங்கும் வசதியும் கொண்ட அப்பேருந்தில் 57 பேர், ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு பயணித்தனர்.
நேற்று மாலை, ஜெய்சால்மரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தையாத் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீப்பிடிக்கத் தொடங்கியதும் அதன் ஓட்டுநர் அப்பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியபோதிலும், பின்புறத்திலிருந்து தீ அதிவேகமாக பேருந்து முழுவதும் பரவியதாக Press Trust of India செய்தி வெளியிட்டுள்ளது.
குறைந்தது 20 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில் கடுமையான காயங்களுக்கு ஆளாகிய 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)