காபுல், 17 அக்டோபர் (பெர்னாமா) -- ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றங்கள் நிலவி வரும் வேளையில், வியாழக்கிழமை பாகிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலுக்குப் பிறகு காபூலில் ஒரு குடியிருப்பு கட்டிடம் மோசமாக சேதமடைந்ததோடு அதன் அருகில் உள்ள கட்டிடங்களும் பாதிப்படைந்தன.
சேதமடைந்த கட்டிடத்தின் ஜன்னல்கள், இடிந்து விழுந்த சுவர்கள் மற்றும் தரையில் சிதறிக் கிடக்கும் இடிபாடுகளின் காட்சிகளைக் காண முடிந்தது.
பாகிஸ்தான் காபூலில் இரண்டு ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாக, வியாழக்கிழமை தலிபான் கூறியது.
இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே இச்செய்தி வெளியாகிய நிலையில், இதற்கு இஸ்லாமாபாத் எந்த பதிலையும் வெளியிடவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய மோதல்களில் 18-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டம், UNAMA குறிப்பிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, காபூல் மற்றும் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் ஆப்கானிய இறையாண்மையை மீறியதாகக் குற்றம் சாட்டி, தாலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளைத் தாக்கின.
இதனால், சனிக்கிழமை இரவு மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படும் வேளையில் பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது.
கட்டார் மற்றும் சவுதி அரேபியாவின் மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து தற்காலிகமாக 48 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நிலைமை பதற்றமாகவே உள்ளது.
இதனிடையே, பல நாட்களாக நீடித்த கடுமையான எல்லை மோதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதால், பல சரக்கு லாரிகள் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சிக்கிக் கொண்டதைக் காண முடிந்தது.
எல்லை மீண்டும் திறக்கப்படுவது குறித்த செய்திக்காக காத்திருந்த அதே வேளையில், லாரி ஓட்டுநர்கள் சாலையோரங்களில் உணவு சமைப்பதையும், தங்கள் வாகனங்களை கழுவுவதையும் காண முடிந்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]