அரசியல்

தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர அன்வார் - சனுசி இணக்கம்

23/10/2025 04:43 PM

அலோர் ஸ்டார், 23 அக்டோபர் (பெர்னாமா) - அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் அவதூறு வழக்கு விசாரணையில் இருந்த தங்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தேசிய நலனுக்காக கவனம் செலுத்த வேண்டிய இன்னும் மிக முக்கியமான விவகாரங்கள் இருப்பதால் வழக்கின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் சட்டச் செலவுகளையும் பரிசீலித்த பின்னர், பிரதமரும் கெடா மந்திரி புசாரும், உறுதியாக சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர இணங்கினர்.

2022-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி டத்தோ ஶ்ரீ அன்வார் குறித்து தாம் வெளியிட்ட அனைத்து கூற்றுகளையும் எந்த நிபந்தனையும் இன்றி வெளிப்படையாக மீட்டுக் கொள்வதாக இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி குறிப்பிட்டிருந்தார்.

அச்சட்ட நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்த எந்த வார்த்தைகளையும், தாம் மீண்டும் கூறப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, முஹமட் சனுசியின் முயற்சியை மதித்து, அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கை செலவு உத்தரவு இன்றி, மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையில்லாமலும் மீட்டுக் கொள்ள பிரதமர் அன்வார் இப்ராஹிமும் ஒப்புக்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)