சிறப்புச் செய்தி

பன்னாட்டு குழந்தைச் சிறார் நூலில் பேராக் அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்

01/03/2026 01:58 PM

ஈப்போ, மார்ச் 01 (பெர்னாமா) -- இந்திய சமுதாயத்தில் இளம் எழுத்தாளர்களை உருவாக்க தமிழ்ப்பள்ளிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது.

அந்த வகையில், பேராக், அலகார் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் ஐந்து மாணவர்களின் படைப்புகள், பன்னாட்டு குழந்தைச் சிறார் நூலில் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளது.

பேராக், அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தீர்த்திக்கா ஜெயநந்தன், ஜெயஸ்ரீ  துரைராஜா, டினேஷ் ராவ் ஜெயக்குமார், சுபாஷினி  வடிவேலு, திவ்யஶ்ரீ பிரகாஷ் ஆகியோர் ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பில் பயில்கின்றனர்.

அவர்கள் எழுதிய சிறுகதைகள் "கதை அரும்புகள்" எனும் பன்னாட்டு குழந்தைச் சிறார் நூலில் இடம் பெற்ற நிலையில், சமுதாயத்திற்கும் பள்ளிக்கும் இப்பெருமை சேர்ந்துள்ளதாக பேராக், அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் கவிதா ஶ்ரீ ராம் தெரிவித்தார்.

''நாட்டில் இளம் எழுத்தாளர்கள் குறைந்துக் கொண்டே வருகிறார். சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு எழுத்து துறையின் மீது ஆர்வத்தைத் தூண்ட இம்முறையை எடுத்தோம்,'' என்றார் அவர்.

இந்தியாவைச் சேர்ந்த சிறுவர் கதை எழுத்தாளர் கன்னிக்கோவில் ராஜா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நெல்லை அன்புடன் ஆனந்தி ஆகியோரின் கதைகள் தினமும் பள்ளியில் நடத்தப்பட்ட கதை களம் எனும் வகுப்பில் இடம்பெறும்.

அவர்களின் கதைகளும், அவற்றை செவிமடுத்தல், வாசித்தல், சொந்த நடையில் சொல்லுதல், நடித்துக் காட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மாணவர்களுக்கு தூண்டுதலாக அமைந்தது என்று ஆசிரியர் கவிதா தெரிவித்தார்.

இந்தச் சாதனை மாணவர்களிடையே எழுத்தாற்றலை தூண்டும் விதமாக அமைந்ததோடு எதிர்காலத்தில் எழுத்தாளர்களை உருவாக்க இது ஒரு தொடக்கமாகவும் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

ஈப்போவில் பேராக் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டிலான "காற்றிலாடும் இறகின் திசை” நூல் வெளியீடு நிகழ்ச்சியில் இந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)