கோலாலம்பூர், 23 அக்டோபர் (பெர்னாமா) -- 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு சுமூகமாக நடைபெறுவதற்காக, அரச மலேசிய போலீஸ் படை (PDRM), பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 10,170 போலீஸ் உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மிக உயரிய நிலையில் இருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் தெரிவித்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு இன்று காலை தலைநகரைச் சுற்றி
நடைபெற்ற ஒத்திகையை கண்ணோட்டமிட்ட டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட், அரச மலேசிய போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு பல குழுக்களை உள்ளடக்கி இருப்பதாகக் கூறினார்.
"இன்று காலை நாங்கள் ஒத்திகையைத் தொடங்கினோம். நமது விருந்தினர்கள் தங்கும் விடுதியிலிருந்து கே.எல்.சி.சி வரை நகரும் பயணம் நன்றாகவும் சீராகவும் நடைபெற்றது. பொதுமக்களுக்குப் போக்குவரத்து துறை குறித்து முன்கூட்டியே வழங்கிய அறிவிப்புகள் பயணத்தை எளிதாக்கி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேற்ற உதவின," என்று டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் கூறினார்.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், புத்ராஜெயா, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் பிரதிநிதிகளின் தங்கும் விடுதிகள் இப்பாதுகாப்புப் நடவடிக்கையில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)