உலகம்

'மெலிசா' வெப்பமண்டல புயலால் நிலச்சரிவு, வெள்ள அபாய அச்சுறுத்தல்

24/10/2025 03:42 PM

டொமினிக்கன் குடியரசு, 24 அக்டோபர் (பெர்னாமா) -- வியாழக்கிழமை கெரிபியன் கடல் பகுதியில் மெலிசா வெப்பமண்டல புயல் தாக்கியதைத் தொடர்ந்து, ஜமாய்க்கா மற்றும் தெற்குத் தீவான ஹிஸ்பானியோலாவில் ஆபத்தான நிலச்சரிவுகளும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாயப் பகுதிகளில் வசிப்பவர்கள், அசம்பாவிதங்களைத் தவிர்க்க, உயரமான இடம்பெயரும்படியும் உள்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புயல் காரணமாக தெற்கு ஹைத்தியின் கடலோர நகரமான மேரிகாட்டில் ஒரு பெரிய மரம் விழுந்ததில், முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், மத்திய ஆர்டிபோனைட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக ஹைத்தி பொது பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜமைக்காவின், கிங்ஸ்டனுக்கு தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், ஹைட்டியின் Port-au-Prince-க்கு தென்மேற்கே 470 கிலோமீட்டர் தொலைவிலும் மெலிசா புயல் மையமிட்டிருந்ததாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம், என்.எச்.சி குறிப்பிட்டிருந்தது.

அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், மணிக்கு 4 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கிலிருந்து வடமேற்கிற்கு மெதுவாக நகர்வதாகவும் அது கூறியது.

அதனால், ஜமைக்காவிற்கும் ஹைட்டியின் தென்மேற்கு தீபகற்பத்திற்கும் சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)