ஜாலான் பினாங், 28 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று காலை நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சீனப் பிரதமர் லி கியாங் இடையிலான கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், வட்டாரத்தில் நிகழும் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
15 நிமிடம் நடத்தப்பட்ட ரகசிய சந்திப்பில் வட்டார பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்ட வேளையில், கம்போடியா- தாய்லாந்து எல்லை சூழல் மற்றும் மியான்மரில் தொடரும் நெருக்கடி தொடர்பான அமைதி முயற்சிகளுக்கும் சீனா தனது ஆதரவை வெளிப்படுத்தியது.
தஞ்சோங் மாலிமில் உள்ள உயர் தொழில்நுட்ப வாகன உற்பத்தித் தொழில்துறை, AHTV மேம்பாடு உட்பட வாகன உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
கோத்தா பாருவில் இருந்து ரந்தாவ் பஞ்சாங் கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம், ஈ.சி.ஆர்.எல் விரிவுபடுத்துதல், நாட்டின் அரிய மண் தனிமங்கள், ஆர்.ஈ.ஈ, பேராக்-பினாங்கு நீர் குழாய் திட்டம் மற்றும் ஹலால் தொழில்துறை போன்ற முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு இணைப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மலேசியா மற்றும் சீனாவிற்கான இரு பயணங்களுக்கும் அன்வார் முன்னதாக பாராட்டு தெரிவித்தார்.
''சீனாவின் 80-வது ஆண்டு விழாவிற்கு அழைப்பு விடுத்ததற்கு அதிபர் சீ ஜின்பிங்கிற்கு நன்றி. அடுத்த சில நாட்களில் தென் கொரியாவில் அவரைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்'', என்றார் அவர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)