பொது

ஆசியான் சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு மலேசியா முழு ஆதரவை வழங்கும்

29/10/2025 01:33 PM

கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) --  ஆசியான் சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மலேசியா தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும்.

மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவம் உட்பட நேற்று நிறைவடைந்த 47-வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்புடைய கூட்டங்களின் வெற்றிக்குப் பங்களித்த அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக தமது வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தமது பதிவில் நேற்று குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, ரஷ்யா, தென் கொரியா மற்றும் அமெரிக்க போன்ற அனைத்து ஆசியான் நாட்டு தலைவர்கள் உட்பட தேசிய தலைவர்கள், வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உரையாடல் பங்காளிகள் என்று எல்லா தரப்புக்கும் அந்த பதிவில் முஹமட் ஹசான் பாரட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், ஆசியான் பொதுச் செயலாளர், ஆசியான் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐரோப்பிய மன்றம், அனைத்துலக காற்பந்து சம்மேளம், பிஃபா, அனைத்துலக நாணய நிதியம், ஐ.எம்.எஃப், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரெஸ் மற்றும் உலக வங்கிகளுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

மேலும், ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்ற காலம் முழுவதும் நெருக்கமான ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை தலைவர்களுக்கும் அவர் நன்றி பாராட்டினார்.

இதனிடையே, ஒருமைப்பாடும் மீள்தன்மையும் கொண்ட சமூகமாக ஆசியான் தொடர்ந்து வலுப்பெறும் என்ற நம்பிக்கையை தாம் கொண்டிருப்பதாக, அவர் தமது பதிவை நிறைவுச் செய்தார்.

முன்னதாக, 1977, 1997, 2005 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் மலேசியா ஆசியானுக்கு தலைமையேற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)