புத்ராஜெயா, 31 அக்டோபர் (பெர்னாமா) -- ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை கொள்கைகளுக்கு ஏற்றவாறு தங்கள் கடமைகளை நிறைவேற்ற எந்தவொரு கேள்வியையும் கேட்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிய உரிமை உண்டு.
ஓர் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி ஒன்றில் சுற்றுலா கருப்பொருளுக்கு ஆங்கில மொழி பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரை அமைச்சர் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதில் எந்தவொரு கேள்வியையும் கேட்கும் உரிமை செய்தியாளர்களுக்கு உண்டு என்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. மேலும் அமைச்சரால் வழங்கப்படும் ஒவ்வொரு பதிலும் விவேகத்தோடும் அதேவேளையில் ஊடகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பரஸ்பர மரியாதையுடனும் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக வெளிப்படைத்தன்மையின் கொள்கையின் அடிப்படையிலும் இருத்தல் அவசியமாகும்," என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தலைமையேற்றார்.
இதனிடையே, இவ்விவகாரம் குறித்து அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று வினவியதற்கு நிலைமையைத் தெளிவுபடுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட ஊடக அமைப்பின் நிர்வாகத்தைச் சந்திக்க சம்பந்தப்பட்ட அமைச்சர் உறுதியளித்துள்ளதாகத் தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஃபஹ்மி கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)