விளையாட்டு

கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் காற்பந்து போட்டி

01/11/2025 06:38 PM

ஈப்போ, 01 நவம்பர் (பெர்னாமா) -- கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கையுடன் விளையாட்டுத் துறையிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் sukan rekreasi masyarakat cergas ஈப்போ எனும் கிளப் கிந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகக் காற்பந்து போட்டி ஒன்றை நடத்தியது.

கடந்த இரண்டு மாத காலமாகச் சுற்றுகள் அடிப்படையில் நடைபெற்று வந்த இப்போட்டிக்கான இறுதிச் சுற்று இன்று காலை ஈப்போ, சங்கீத சபா தமிழ்ப்பள்ளி அருகில் உள்ள கே-டி-எம் திடலில் நடைபெற்றது.

இப்போட்டியில் கிளேபாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வாகை சூடிய வேளையில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடத்தை வென்றது.

மாணவர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமின்றி ஒழுக்கம், கட்டொழுங்கு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட நற்பண்புகளையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இப்போட்டியை தாங்கள் ஏற்று நடத்துவதற்கான முதன்மைக் காரணம் என்று அக்கிளப்பின் தலைவரும் வழக்கறிஞருமான த. இளங்கோ தெரிவித்தார்.

''மாணவர்கள் தற்போது பல்வேறு பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாகத் தொடக்கப் பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்கு அவர்கள் செல்லும்போது பல்வேறு கட்டொழுங்குப் பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு இதுபோன்ற விளையாட்டுகள் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் சாதிக்க வேண்டும் என்ற ஊக்குவிப்பையும் விதைப்பதாக நம்புகிறேன்,"  என்று இளங்கோ குறிப்பிட்டார்.

வரும் காலங்களில் மாநில அளவில் இத்தகைய போட்டிகளை நடத்துவதற்குத் தமது தரப்பு எண்ணம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)