கோலாலம்பூர், 5 நவம்பர் (பெர்னாமா) -- கடன் பெறுவோர் மற்றும் கடன் வழங்குவோரின் பரிவர்த்தனைகளை நிகழ்நேரத்தில் பதிவு செய்யக்கூடிய தரவு களஞ்சிய அமைப்பை உருவாக்குவதற்கான முன்னோடி திட்ட பரிந்துரையை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு KPKT இறுதி செய்து வருகிறது.
இத்தளம் இலக்கவியல் கண்காணிப்பு மற்றும் கட்டண செயல்முறையுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று KPKT துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு தெரிவித்தார்.
அச்செயல்முறை கடன் வழங்குவோரின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதோடு, கடன் பெறுவோரான பொதுமக்கள் மீது கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதையும் தடுக்கும் என்றும் அய்மான் கூறினார்.
''அதே நேரத்தில், கடன் பெறுவோரின் பாதுகாப்பு அம்சத்திலிருந்து, இந்த செயல்முறை, கடன் காப்புறுதி பாதுகாப்புத் திட்டத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் தகுதியுள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்,'' என்றார் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு.
இன்று மக்களவையில் கடன் பெறுவோர் மற்றும் உரிமம் பெற்ற கடன் வழங்குவோரிடையே ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதா என்று பாத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் எழுப்பிய கேள்விக்கு அய்மான் அவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)