பொது

'ஏஜேகே' விவகாரங்களைக் களைந்து சபாவை மேம்படுத்தப் பிரதமர் இலக்கு

09/11/2025 02:25 PM

கோத்தா கினபாலு, 09 நவம்பர் (பெர்னாமா) -- ஏஜேகே எனப்படும் நீர், சாலை, மின்சாரம் போன்ற பிரச்சனைகளை நிர்வர்த்தி செய்வதற்கு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவதன் வழி சபா மாநிலத்தை மேம்படுத்துவதற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி கொண்டுள்ளார்.

உலு பதஸ் நீர்மின் அணை மற்றும் பான் போர்னியோ நெடுஞ்சாலையின் மேம்பாடு ஆகிய தொடர் முயற்சிகள் மூலம் இந்த உறுதிப்பாடு நிரூபிக்கப்பட்டு வருவதாகப் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் தெரிவித்தார்.

''சபா மாநில மக்களுக்குச் சேவையாற்றுவதில் தாம் தீவிரமானவர் என்பதைப் பிரதமர் நிரூபித்து வருகிறார். அவர் பிரதமரானது முதல் சபா தேர்தலுக்கு முன்பே உள்கட்டமைப்பு பிரச்சினைகள் குறிப்பாக 'ஏஜேகே'விற்குத் தீர்வு காணப்பட்டு இறுதியாக அவ்விவகாரம் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்வதற்காக அவர் மாநிலத்திற்கு வந்துள்ளார்,'' என்று டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முஹமட் அகின் கூறினார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற ஓராண்டு காலம் கழித்து 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அன்வார் சபாவிற்கு வருகைப் புரிந்தார் என்றும் தெனோம் உட்புறப் பகுதியில் உள்ள உலு பதஸ் நீர்மின் அணையின் கட்டுமானத்தைத் தொடக்கி வைத்ததுடன் மின்சாரம் மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகளும் முழுமையாகத் தீர்வு காணப்பட்டதை உறுதி செய்திருந்தார் எனவும் அண்மையில் கோத்தா கினபாலுவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது டத்தோ ஶ்ரீ ஷம்சுல் கூறினார்.

இதனிடையே, வரும் 2029ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த அணை 187.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன் சபாவின் எரிசக்தி விநியோகக் கட்டத்தையும் 15 விழுக்காடு அதிகரிக்கும்.

அவற்றுடன் நாளொன்றுக்கு 600 கோடி லிட்டர் தண்ணீரையும் வழங்கக்கூடும்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)