பொது

2026ஆம் ஆண்டின் நான்காவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு

09/11/2025 07:56 PM

பெட்டாலிங் ஜெயா, 9 நவம்பர் (பெர்னாமா) -- உலகத் தமிழர்களிடையே தமிழ்க் கல்வி தொடர்ந்து வளர்ச்சியடையும் விதமாக அடுத்த ஆண்டு ஜூலை மூன்றாம் தேதி தொடங்கி ஐந்தாம் தேதி வரையில் நான்காவது புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு நடைபெறவுள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் மொழியை கற்பிப்பதில் சிறந்து விளங்குவதற்கு உலகத் தமிழ் அறிஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு உலகத் தமிழ்க் கல்வி கழகம் இம்மாநாட்டை தமிழ்நாடு சென்னை அண்ணா நூலகத்தில் ஏற்பாடு செய்திருக்கின்றது.

இந்தியாவை அடுத்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உள்ள கல்வியாளர்கள் இம்மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று உலகத் தமிழ்க் கல்வி கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டார்.

மேலும், இம்முறை நடைபெறவுள்ள மாநாட்டின், சில புதிய முயற்சிகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். 

''அதுமட்டுமில்லாமல், இவ்வாண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் ஒவ்வொரு நாட்டிற்கும் முகப்புகள் வழங்கப்பட உள்ளன. தங்கள் நாட்டின் தமிழ்க் கல்வி முறை, புத்தகங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கொடுக்கப்படும் முகப்புகளின் கண்காட்சிக்கு வைக்கலாம்,'' என்று அவர் கூறினார்.

அதேவேளையில் மலேசியாவின் கல்வி முறை அணுகலையே அமெரிக்காவில்  தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலோர்  பின்பற்றுவதாகக் கூறிய வெற்றிச் செல்வி, இம்மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து அதிகமான தமிழாசிரியர்கள் கலந்து கொண்டால் அது சிறந்த பரிமாற்றத்திற்கு வித்திடும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

உலக அளவில் நடைபெறும் மாநாடு என்பதால், தரமான ஆய்வுக் கட்டுரைகளையே தமது தரப்பு எதிர்ப்பார்ப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

''தரமான கட்டுரைகளின் கட்டுரைகள் கண்டிப்பாக ஏற்கப்பட்டு இம்மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.  மலேசிய நாட்டின் தமிழ்க் கல்வி 200 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக இருக்கின்றது, பல்கலைக்கழகம் வரை தமிழ் இருக்கின்றது,  ஆக எதிர்கால தலைமுறையினரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல இம்மாதிரியான உலகத்தோடு ஒட்டி ஒழுகல் மிகவும் முக்கியமான இணைப்புகளில் ஒன்று என்று நான் கருதுகிறேன்,'' என சி.மா இளந்தமிழ் கூறினார்.

"மாநாடுகளில் கலந்துக் கொண்டு கட்டுரைகளை படைப்பது மட்டுமில்லாம் மற்றவர்களின் கட்டுரைகளை கேட்பது, கலந்துரையாடல்களில் பங்கு கொள்வது நமது மேம்பாட்டிற்கு முக்கியமான பங்கை ஆற்றும்,'' என முத்து நெடுமாறன் கூறினார்.

மாநாட்டிற்கு செல்ல ஆர்வமுள்ளோர் தங்களின் படைப்புகளை itadtec.org எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.

மூன்று நாள்கள் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில், ஆய்வு கட்டுரை படைப்பு, பயிற்சி பட்டறை, குழு விவாதம், மாணவர் ஆய்வுக்கட்டுரை, கலந்துரையாடல் என பன்முக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  30 பேர் கொண்ட கல்வியாளர் குழு மலேசியாவைப் பிரதிநிதித்து தமிழ்நாடு செல்வர்.

இம்மாநாடு தொடர்பாக இன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர்கள் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)