கோலாலம்பூர், 10 நவம்பர் (பெர்னாமா) -- பல்கலைக்கழக இந்திய மாணவர்கள் மத்தியில் மொழி உணர்வை ஏற்படுத்தும் விதமாக முனைவர் இரா. தண்டாயுதம் 24ஆம் சுழற்கிண்ண சொற்போர் போட்டியை மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேரவை ஏற்று நடத்தவுள்ளது.
வெறும் விவாத களமாக மட்டுமின்றி தமிழ்மொழியின் மீதான அன்பையும் மகத்துவத்தையும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் இயங்கலை முறையிலான சொற்போர் பட்டறையில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சொற்போர் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் வாதத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு அப்பட்டறை பெரும் பயனாக இருக்கும் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் ஷமீரா மோசஸ் தெரிவித்தார்.
மேலும், ''சொற்போருக்குத் தயாராக விரும்புவர்கள் தங்கள் வாதத்திறனை மேம்படுத்திக்கொள்ள மலாயாப் பல்கலைக்கழக தமிழ் பேரவை ஏற்பாட்டில் சொற்போர் பட்டறை ஒன்று நவம்பர் 20ஆம் தேதி இயங்கலையில் நடைப்பெற உள்ளது,'' என்று அவர் கூறினார்.
10 முதல் 12, 13 முதல் 17 மற்றும் 18 முதல் 30 வயதுக்குட்ப்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடைபெறவுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, சொற்போர் போட்டிக்கான ஆரம்ப சுற்று டிசம்பர் 6 முதல் 10ஆம் தேதி வரை இயங்கலையிலும் அரை இறுதி மற்றும் இறுதி சுற்று டிசம்பர் 13ஆம் தேதி நேரடியாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளதாக ஷமீரா விவரித்தார்.
எனவே, முனைவர் இரா. தண்டாயுதம் 24ஆம் சுழற்கிண்ண சொற்போர் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் திரையில் காணும் க்யூ எனப்படும் விரைவு பதில் குறியீட்டின் மூலம் இம்மாதம் 19ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
சொற்போர் குறித்த மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள 'tamillanguagesociety' எனும் திரையில் காணும் படவரியை நாடலாம்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)