ஷா ஆலம், 11 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் புக்கிட் திங்கி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானவர் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் தேடப்பட்ட நபர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
34 வயதான அந்நபர் மீது இதர பல குற்றப் பதிவுகளும் உள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் கூறினார்
பாதிக்கப்பட்டவரின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, விசாரணையில் இதுவரை பல்வேறு அம்சங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் சாட்சிகள் என்று ஏழு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஷசெலி கஹார் தெரிவித்தார்.
"விசாரணை இன்னும் நடத்தப்பட்டு வருகிறது. உரையாடல்களும், வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு, இதுவரை பிரேத பரிசோதனையும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் நெஞ்சு மற்றும் வயிற்றில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஆகும். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, இறந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது," என்றார் டத்தோ ஷசெலி கஹார்.
முன்னதாக, இரவு மணி 11 அளவில் நடந்த இச்சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பந்தப்பட்ட ஆடவர் உயிரிழந்தார்.
மற்றொரு நிலவரத்தில் பூசாட் பண்டார் பூச்சோங்கில் இந்தியாவின் நிரந்தர குடியுரிமை கொண்டுள்ள ஆடவர் ஒருவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அறுவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் ஷாசெலி கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)