பொது

53 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சா பறிமுதல்

11/11/2025 06:08 PM

பகாங், 11 நவம்பர் (பெர்னாமா) -- பகாங், பெந்தோங் மற்றும் மாரானில் கடந்த செவ்வாய் வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளின் மூலம் 53 லட்சத்து 40-ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய கஞ்சா வகை போதைப் பொருள் உட்பட கஞ்சா பூக்களை விநியோகிக்கவிருந்த மோசடி கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் நான்காம் தேதி மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனை நடவடிக்கையில் பெந்தோங், கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம் இ.சி.ஆர்.எல் கட்டுமானத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் 140.4 கிலோகிராம் எடைக் கொண்ட கஞ்சா பூக்கள் வகை போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹயா ஒத்மான் தெரிவித்தார்.

இப்போதைப்பொருளின் சந்தை மதிப்பு 50 லட்சத்து 40,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ள வேளையில் இது ஒரு கிலோகிராம் 36,000 ரிங்கிட்டிற்கு சமமாகும்.

கடந்த நவம்பர் ஆறாம் தேதி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் 303,800 ரிங்கிட் மதிப்புடைய 98 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வேளையில் அதன் அனுப்புனர் என நம்பப்படும் உள்நாட்டு ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

''41 ஒளிபுகும் நெகிழிப் பைகளில் கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய 3 பெட்டிகளை நாங்கள் கண்டுபிடித்தோம். மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை, ஆரஞ்சு நிறம் என 4 சாக்குகளில் இருந்தன. 61 ஒளிபுகும் நெகிழிப் பைகளில் கஞ்சா பொட்டலங்கள் அடங்கியிருந்தன,'' என்றார் டத்தோ ஶ்ரீ யஹயா ஒத்மான்.

இவ்வழக்கு 1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)