அரசியல்

டிசம்பர் 2ஆம் தேதியே அமைச்சில் சேவையாற்றும் இறுதி நாள் - தெங்கு சஃப்ருல் 

13/11/2025 04:43 PM

கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI-இல் தாம் சேவையாற்றும் இறுதி நாள் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதி என்று அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் இன்று உறுதிப்படுத்தினார்.

சவால்மிக்க உலகளாவிய பொருளாதார சூழலில் அந்த அமைச்சு தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்ய அதன் மறுசீரமைப்புத் திட்டத்தை தொடர வேண்டிய தேவை அவசியம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அமைச்சு தொடர்ந்து புதிய முதலீட்டு உத்திகளை செயல்படுத்துவதோடு நாட்டின் ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்தி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றியமைப்பதை உறுதி செய்ய MITI-இன் மறுசீரமைப்பு திட்டம் முக்கியமானது என்று தெங்கு சஃப்ருல் விவரித்தார்.

"டிசம்பர் 2-ஆம் தேதி, இந்த அமைச்சில் எனக்கு இறுதி நாள். சட்டப்படி, நான் இனி மேலவையில் இல்லை. அமைச்சராகப் பணியாற்ற நீங்கள் எந்த அவையிலாவது  இருக்க வேண்டும். எனவே, இது பிரதமரைப் பொறுத்தது. ஆனால் நிச்சயமாக நான் அமைச்சராகத் தொடர முடியாது. எனவே புதிய அமைச்சர் அல்லது MITI-யின் பொறுப்பில் இருப்பவர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். நான் செய்யக்கூடியது என்னவென்றால், மாற்றத்தின்போது புதிய அமைச்சருக்கு  உதவுவதுதான்," என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில், 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான MITI-இன் அறிக்கை அட்டையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.

2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தெங்கு சஃப்ருல்முதல் முறையாக செனட்டராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி அவர் இரண்டாவது முறையாக செனட்டராக நியமிக்கப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)