துவாரான், 13 நவம்பர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலில் சபா மக்கள் கூட்டணி,ஜி.ஆர்.எஸ் சார்பில் போட்டியிடவிருக்கும் மேலும் நான்கு வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் இன்று அறிவித்தார்.
செபாத்தேக் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஹசான் ஏ.கனி பெங்கெரான் அமிர், குகுசான் தொகுதியின் சபா மக்கள் நம்பிக்கைக் கட்சிப் பிரிவுத் தலைவர் சம்சியா உஸ்மான், சபா மலேசிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மூத்த விரிவுரையாளர் இணைப் பேராசிரியர் முனைவர் போனவென்சுரே போனாஃபேஸ் தம்பாருலி தொகுதி, ஜி.ஆர்.எஸ் மத்திய இளைஞர் பிரிவு செயலாளர் ராஃபி ரோபர்ட், பிங்கோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அறிவித்தார்.
"குகுசான் தொகுதியில் சம்சியா உஸ்மான் போட்டியிடுவதற்கு ஏற்கனவே நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.துலிப்பில் நிறைவாயிற்று. அது எங்களுடையது அல்ல. நம்பிக்கைக் கூட்டணி தொகுதி. செபாத்தேக் தொகுதியின் வேட்பாளராக டத்தோ ஹசானை முடிவு செய்துள்ளோம்," என்றார் அவர்.
இதனிடையே, 17-வது சபா மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது மிகப் பெரிய சவாலாகும் என்று ஹஜிஜி நோர் தெரிவித்தார்.
மூன்று முதல் நான்கு நபர்களைக் கருத்தில் கொள்ளக்கூடிய பல தொகுதிகள் இருந்ததால், நன்கு ஆராய்ந்து, சிந்தித்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"அனைவரிடத்திலும் நல்ல செல்வாக்கும் பங்களிப்பும் உள்ளது. தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும் என்றாலும் ஒருவரை மட்டுமே நாம் தேர்வு செய்ய முடியும். இருவரைத் தேர்ந்தெடுக்க என்னால் முடியாது. மாறாக ஒருவரை மட்டும் தேர்வு செய்ய முடியும். அதில்தான் எனக்குப் பிரச்சினை எழுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று UPPM நாடாளுமன்றம் 170 துவாரன் தொகுதியில் நடைபெற்ற விளையாட்டு தினம் மற்றும் குடும்ப தின கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)