பொது

சிறுவர்களை அரசியல் உள்ளடக்கமாகப் பயன்படுத்தாதீர்

16/11/2025 05:25 PM

கூச்சிங், 16 நவம்பர் (பெர்னாமா) -- 17வது சபா மாநிலத் தேர்தலின் போது சிறுவர்களை அரசியல் உள்ளடக்கமாகப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய எதிர்மறையான நடவடிக்கைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் கடப்பாட்டினைப் பெற்றோர் கொண்டிருப்பதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூகநல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

''ஆம், அதனால்தான் நாங்கள் எப்போதும் குறிப்பாக எம்சிஎம்சி மூலம் சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நினைவூட்டி வருகிறோம். இவ்விவகாரத்தில் பெற்றோரும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். சிறுவர்களை உட்படுத்திய எவ்வித உள்ளடக்கத்தையும் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு அவர்களிடையே இருக்க வேண்டும்,'' என்றார் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி. 

பெற்றோர் அதற்கு அனுமதிக்காத நிலையில் பிள்ளைகள் குறித்த உள்ளடக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாது என்று கூறிய நேன்சி எந்தவோர் அரசியல் கட்சியையும் விமர்சிப்பது அல்லது கண்டனம் தெரிவிப்பதற்குப் பிள்ளைகளைப் பயன்படுத்துவதற்கு மாறாக அவர்களை நேர்மறையான சிந்தனையுடன் வளர்க்க முனைய வேண்டும் என்று ஆலோசனைக் கூறினார்.

இன்று சரவாக், கூச்சிங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி சமத்துவ பயிற்சி DET கருத்தரங்கு மற்றும் Job Coach வேலை சேவைகள் ஆகியவற்றைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)