அரசியல்

திவால் வழக்கு: நஜீப் மற்றும் அவர் மகனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

17/11/2025 02:49 PM

கோலாலம்பூர், 17 நவம்பர் (பெர்னாமா) -- தங்களுக்கு எதிரான திவால் தொடர்பான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரி டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது மகன் டத்தோ முஹமட் நசிஃபுடின் செய்த மேல்முறையீட்டு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இருவரும் தலா 1,690 கோடி ரிங்கிட் மற்றும் 3 கோடியே 76 லட்சம் ரிங்கிட் வரி பாக்கியைச் செலுத்தத் தவறியதால் அவர்கள் மீது திவால் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. 

அவ்வழக்கு விசாரணையின் ஒத்திவைப்பை நியாயப்படுத்தும் பாதிப்பு எதுவும் இல்லை என்பதை  நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து, அந்த மேல்முறையீட்டை நீதித்துறை ஆணையர் சுஹேந்திரன் சொக்கநாதன் சாஹிரன் அப்துல்லா தள்ளுபடி செய்தார்.

இரண்டு மேல்முறையீடுகளும் தலா 7,000 ரிங்கிட் செலவில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனிடையே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய கோரி முன்னாள் பிரதமரும் அவரது மகனும் செய்த மேல்முறையீட்டை கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி தள்ளுபடி செய்த கூட்டரசு நீதிமன்றம், அவர்கள் இருவரும் செலுத்தப்படாத வரிகளைச் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)