பொது

ஆப்பிரிக்க பயணத்திற்குப் பிறகு சபா தேர்தல் பிரச்சாரத்தில் களம் காண்பார் பிரதமர்

17/11/2025 06:14 PM

புத்ராஜெயா, 17 நவம்பர் (பெர்னாமா) -- ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளுக்கான பயணங்களை முடித்து திரும்பியவுடன் 17வது சபா மாநில தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணியின் பிரச்சாரத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் பங்கேற்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் களம் இறங்கியிருக்கும் நம்பிக்கை கூட்டணியின் பிரச்சாரத்தை வழி நடத்துவதற்கான தமது உறுதிபாட்டைத் தனிப்பட்ட முறையில் அன்வார் வெளிப்படுத்துவார் என்றும் அவரது மூத்த பத்திரிக்கை செயலாளர் துங்கு நஸ்ரூல் அபிடா தெரிவித்தார்.

தேர்தல் சொற்பொழிவு, அடிமட்ட நிலையிலான சந்திப்புகள் மற்றும் தேர்தல் கேந்திரங்களுடனான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உட்பட பிரதமரின் நடவடிக்கை அட்டவணையைப் பிரதமர் துறை அலுவலகமும் நம்பிக்கை கூட்டணியும் இறுதி செய்து வருவதாகவும் துங்கு நஸ்ரூல் அபிடா கூறினார்.

''பிரதமர் மீண்டும் சபா மாநிலத்திற்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அவர் கோலாலம்பூர் வந்தவுடன் அவருக்கான அட்டவணையை அறிவிப்போம். இன்னும் சில நாட்கள் இருப்பதால் தற்போதைக்குத் தேர்தலுக்கு முன்னதாகப் பிரச்சாரத்தைத் தொடர அவர் சபாவிற்கு வருவதான திட்டம் உள்ளது,'' என்றார் துங்கு நஸ்ரூல் அபிடா.

இன்று புத்ராஜெயா பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)