உலகம்

வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு

19/11/2025 02:54 PM

சிலி, 19 நவம்பர் (பெர்னாமா) -- சிலியின், பதாகோனியா   பகுதியில் உள்ள டோட்ரேஸ் டெல் பெயின் தேசிய பூங்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பனிப்புயலில், சிக்கி காணாமல் போன சுற்றுலாப் பயணிகளை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த குறைந்தது இருவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணமல் போன, மேலும் எழுவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள வேளையில் மோசமான வானிலை காரணமாக தேடல் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் பொலிவியாவில் உள்ள சமைபடா நகராட்சியில் ஆறு மணி நேரமாக பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் குறைந்தது அறுவர் காணாமல் போனதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதியில் சுமார் 80 விழுக்காட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடிய அவசரகால குழுக்கள், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள், காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தென்மேற்கு ஜப்பானிலுள்ள ஒய்டா நகரில் 170க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்குப் பரவிய தீவிபத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு நிலவரத்தில், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் நடந்த காரில் மோதி கத்தியால் குத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மூவர் பேர் காயமடைந்தனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் விவரித்துள்ள நிலையில் இத்தாக்குதலுக்கு இன்னும் எந்தவொரு தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)