உலகம்

தென் கொரியா: கடலில் கப்பல் பாறையை மோதி சிக்கியதற்கு மனித தவறு காரணம்

20/11/2025 04:23 PM

மொக்போ, 20 நவம்பர் (பெர்னாமா) -- தென் கொரியாவின் தென்மேற்கு கடற்கரையில் பயணிகள் கப்பல் ஒன்று பாறையில் மோதி சிக்கியிருந்த நிலையில், அதில் உள்ள 267 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கு மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று கடல்கரை காவல் படை தெரிவித்துள்ளது.

246 பயணிகள் மற்றும் 21 பணியாளர்களை ஏற்றிச் சென்றிருந்த 26,546 டன் எடையுள்ள க்கூவின் ஜெனுவியா Queen II கப்பல், மொக்போ நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது சியோலுக்கு தெற்கே 366 கிலோமீட்டர் தொலைவில், சினான் கடற்கரையில் உள்ள ஜங்சான் தீவுக்கு அருகில், மக்கள் வசிக்காத ஜொக் தீவில் புதன்கிழமை இரவு மணி 8.17 அளவில், பாறையில் மோதி சிக்கியது.

​​சம்பவம் நிகழ்ந்தபோது, அக்கப்பலின் மாலுமி தனது தொலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறுகிய நீர்பகுதி வழியாகக் கடந்து செல்ல வேண்டிய நேரத்தில் அவர் அதனை முறையாக இயக்கவில்லை என்பதும், கடல்கரை காவல் படையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்த மூன்று மணி நேரத்திற்குள், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)