கோலாலம்பூர், 01 டிசம்பர் (பெர்னாமா) -- மனித முயற்சிக்கான எல்லையைச் சோதித்து, உலகில் சாதனைப் படைக்க புறப்படும் ஒவ்வொருவருக்கும் ஒழுக்கமும் மன உறுதியும் வெற்றிக்கான படிகளாகிறது.
அதில் ஒவ்வொன்றாய் ஏறி தமது வாழ்வின் அசாத்தியமான தருணங்களைச் சாதகமாக்கி சாதனைப் படைத்திருக்கின்றார் ரவாங்கைச் சேர்ந்த சத்யன் அன்பழகன்.
மலேசியாவில் நடைபெற்ற Peninsular Divide எனும் நெடுந்தூர சைக்கிளோட்ட போட்டியில் 1527 கிலோமீட்டர் தூரத்தை நிறைவு செய்து மூன்றாம் இடம் பிடித்துள்ள சத்யன், தற்போது சமுதயாத்தில் கவனம் ஈர்த்த சைக்கிளோட்ட வீரராகியுள்ளார்.
ஜோகூர், பெங்கெராங்கில் இருந்து பெர்லிஸ் வாங் கெலியான் வரை 20,000 மீட்டர் மொத்த உயர அதிகரிப்புடன் 1527 கிலோமீட்டரை 101 மணி நேரம் ஒரு நிமிடத்தில் 42 வயதான சத்யன் கடந்துள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தில் சைக்கிள்ளோட்டுவதை தமது பொழுதுப்போக்காக தொடங்கிய அவர், பின்னர் அதனையே ஒரு சாதனையாக்க வேண்டும் என்ற எண்ணத்தை தமக்குள் விதைத்தாக முழு நேர பொறியியலாளரான சத்யன் கூறினார்.
''நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் நான் ஓடுவதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டேன். பின்னர், திடீரென சைக்கிள் வாங்கும் எண்ணம் எனக்கு தோன்றியது. முதலாவதாக, நான் மலையில் பயணிக்கும் சைக்கிளை வாங்கினேன். அதை நான் 80 கிலோமீட்டர் வரை ஓட்டினேன். பின்னர், சாலையில் செலுத்தக்கூடிய சைக்கிளை வாங்கினேன்'', என்றார் அவர்.
அதோடு, இப்போட்டிக்கான காலக்கட்டம் முழுவதும் தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து சத்யன் இவ்வாறு விவரித்தார்.
''நான் கலந்து கொண்டு இப்போட்டியில் ஐந்தாவது இடத்திலாவது சாதனை பெற வேண்டும் என்பதை நான் இலக்காக கொண்டிருந்தேன். சொந்த நாட்டில் கலந்து கொள்வதால், பின்தங்கிய நிலையில் இருந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். எனவே, அன்றாடம் அதற்கான பயிற்சிகளை நான் மேற்கொள்வேன். போட்டிக்கான நாளும் வந்துவிட்டது. ஆனால் பயம் குறையவில்லை'', என்று சத்யன் தெரிவித்தார்.
மேலும், போட்டி தொடங்கிய 45 கிலோமீட்டரில் சைக்கிள் டயரில் காற்று குறைந்து போனது தமக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்ததாகவும், இரு பிள்ளைகளுக்குத் தந்தையான சத்யன் கூறினார்.
போட்டியின் போது சைக்கிளில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகள், கடுமையான வானிலை மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் பலவற்றை தாம் எதிர்கொண்டாலும், அடுத்தாண்டு இந்தோனேசியாவில் நடைபெறும் Lintang Flores மற்றும் Bentang Jawa ஆகிய போட்டிகளில் பங்கேற்கவும் அவர் இலக்கு கொண்டுள்ளதை பெர்னாமா செய்திகளிடம் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 12 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 46 சைக்கிளோட்டிகள் பங்கேற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)