கோலாலம்பூர், டிசம்பர் 04 (பெர்னாமா) -- சபாவில் கனிம ஆய்வு உரிமங்களை அங்கீகரிப்பதில் மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 829 ரிங்கிட் 3 சென் கையூட்டு பெற்றதாக பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முஹமட் அகின் மீது இன்று கோலாலம்பூர் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிபதி சுசானா ஹுசின் முன் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டுகளை 50 வயதான அவர் மறுத்தார்
2023-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின்-இல் உள்ள ஒரு தங்கும் விடுதி கார் நிறுத்தும் இடத்தில் தொழிலதிபர் ஆல்பர்ட் தெய் ஜியான் சியிங் என்பவரிடமிருந்து தனக்காக ஒரு லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை கையூட்டு பெற்றதாக டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.
ஆல்பர்ட் தெய் தொடர்புடைய நிறுவனங்கள், சபாவில் கனிம ஆய்வு உரிமத்திற்கான ஒப்புதலைப் பெற உதவும் நோக்கில் இந்த கையூட்டு வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதேபோன்ற நோக்கத்திற்காக 2024-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி கோலாலம்பூர் புக்கேட் பண்டராயா ஜாலன் மெடாங் செரை-இல் உள்ள ஒரு வளாகத்தில் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் தமக்காக 40,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை தெய்-இடம் லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 14,580 ரிங்கிட் 03 சென் மதிப்புள்ள தளவாட மற்றும் மின்சாரப் பொருள்களையும் 22,249 ரிங்கிட் ரொக்கப் பணத்தை தெய்-இடமிருந்து லஞ்சமாக பெற்றதாகவும் ஷம்சுல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் சட்டம் 694, செக்ஷன் 17(a) மற்றும் அதே சட்டம் செக்ஷன் 24(1) இன் கீழ் அந்த நான்கு குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் லஞ்சத்தின் தொகை அல்லது மதிப்பை விட குறைந்தது ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது அவ்விரண்டில் அதிகமாக இருக்கும் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வரும்.
உள்நாட்டினர் இருவரின் உத்தரவாதம் மற்றும் ஒரு லட்சத்து 50,000 ரிங்கிட் ஜாமீன் தொகையுடன் ஷம்சுல் விடுவிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கு முடியும் வரை தமது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் அரசு தரப்பு சாட்சிகளுடன் தலையிடக்கூடாது ஆகிய கூடுதல் நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)