பொது

அரசாங்கத் துறையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு விளக்கக் கூட்டம்

14/12/2025 07:19 PM

ஈப்போ, டிசம்பர் 14 (பெர்னாமா) -- இருபது ஆண்டுகளுக்கு முன்னதாகப் பொது சேவை துறையில் பத்து விழுக்காட்டு இந்தியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை 3.6 விழுக்காடாகச் சரிவு கண்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் குறிப்பிட்ட சில துறைகளை விடுத்து மற்ற அனைத்து துறைகளிலும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகச் சரிவு காணும் என்பதால் புத்ராஜெயா இந்திய அரசாங்கப் பணியாளர்கள் சங்கமான 'இமையத்தின்' ஏற்பாட்டில் இன்று பேராக், ஈப்போவில் அரசாங்க வேலை வாய்ப்புகள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. 

இதற்கு முன்னர் ஜோகூரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து பேராக் மாநிலத்திலும் அதிகமானோர் குறிப்பாக இளைஞர்கள் அரசாங்கப் பணிகளில் சேரவேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியை நடத்த தாம் கேட்டுக் கொண்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

''அரசாங்கத்தில் பணி புரிய எவ்வாறு விண்ணப்பம் அதன் விதிமுறைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது விண்ணப்பத்தில் இடம்பெற்றிருக்க வேண்டியவை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை விஷயங்கள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டது. அரசாங்கத்தில் பணிபுரியும் ஓர் இந்தியர் மற்றோர் இந்தியரை அத்துறைக்குத் தேர்ந்தெடுப்பதே ஏற்பாட்டாளர்களின் முதன்மை நோக்கமாக உள்ளது,'' என்று குலசேகரன் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அரசாங்கத்துறை வேலை வாய்ப்பிற்காக மட்டும் காத்திருக்காமல் தங்களின் கல்வி மற்றும் அனுபவத் தகுதிக்கு ஏற்ப மற்ற துறைகளிலும் விண்ணப்பிக்குமாறு சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான இளைஞர்கள்  விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தமது தரப்பின் வழிகாட்டலைப் பின்பற்றினால் இவர்களில் பலருக்கு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இமையம் இயக்கத்தின் தலைவர்  டாக்டர் சதீஷ்குமார் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

''பொதுவாக அரசாங்கத்துறையில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் இளைஞர்களிடம் சில விஷயங்களில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும். அதை கற்றுக் கொடுப்பதே எங்களின் நோக்கமாகும். மேலும் அரசாங்கம் தொடர்பிலான அதிகமான சாவடிகளும் இங்கு திறக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார் அவர்.

ஈப்போ ஐ.ஆர்.சி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 1,500 இந்திய இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)