தைப்பிங், டிசம்பர் 07 (பெர்னாமா) -- சமய காரியங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய அர்ச்சகர் துறை மீதான நாட்டம் இளைஞர்களிடையே குறைந்து காணப்படுகிறது.
எனவே, இந்து ஆகம முறைப்படி வேத பாடசாலையில் அர்ச்சகருக்கன சமய கல்வியை, பேராக் மாநிலத்தில் உள்ள பதின்ம வயதினரும் இளைஞர்களுக்கும் கற்றுக் கொள்ளும் விதமாக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தாம் ஆலோசித்து வருவதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.
''நமக்குப் போதுமான மாணவர்கள் இருந்தால் அதை ஒரு டிவெட் பயிற்சியாக கூட மேற்கொள்ளலாம். தமக்கு கீழ் இயங்கும் அரசாங்க நிறுவனத்தின் நிதி பெற்று அதன் மூலமாக அவர்களுக்கு வேண்டிய அனைத்து பயிற்சிகளையும் வழங்கலாம். குறைந்தது 15 பேர் இருந்தால்தான் இப்பயிற்சியை அமல்படுத்த முடியும். போதுமான அளவில் மாணவர்கள் இருந்தால் அத்திட்டத்தை எவ்வாறு வழிநடத்துவது, அதற்கான பாடநூலை எப்படி உருவாக்குவது போன்ற அனைத்தும் தீர்மானிக்கப்படும்,'' என்று அவர் விவரித்தார்.
அதேவேளையில், ஆலயத் திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தை அதன் நிர்வாகத்தார், மாநில அல்லது மத்திய அரசாங்கத்தின் நிதியைப் பெற்று நடத்தினால், நிச்சயமாக மலேசிய குருக்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
''அவ்வாறு போதுமான மலேசிய குருக்கள் இல்லாவிடில், அதற்கான குருக்கள் சங்கத்தின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம். அப்போதும் குருக்கள் கிடைக்காவிடில் அச்சங்கம் மூலமாக குறைந்த விலையில் இந்தியா மட்டும் இலங்கையிலிருந்து அவர்கள் குருக்களைத் தருவிக்க முடியும். முதல்கட்டமாக மலேசிய குருக்களையே நாட வேண்டும். அவ்வாறு கிடைக்காவிடில் பிறகே வெளிநாட்டு குருக்களை அழைத்து வர முடியும்,'' என்றார் அவர்.
பேரா மாநிலத்தைப் பொறுத்த வரை, அண்மையில் நடைபெற்ற ஆலய கும்பாபிஷேக விழாக்களில் உள்நாட்டைச் சேர்ந்த அரச்சகர்களே ஆகம முறைப்படி நடத்தியதைக் காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்று பேராக், அவுலோங் (AULONG) ஸ்ரீ மகா சிவாலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பின்னர் சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவுலோங் வட்டாரத்தில் வசித்து வந்த இந்துக்கள், தங்களின் வழிபாட்டிற்காக பலகையில் உருவாக்கிய இவ்வாலயம், தற்போது 8 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் காண்பதாக ஆலயத் தலைவர் ஜி. சுரேந்திரன் ஆழ்வார் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)