பொது

மேலவை உறுப்பினர்களாக இரு துணை அமைச்சர்கள் மீண்டும் பதவி உறுதிமொழி

10/12/2025 03:38 PM

கோலாலம்பூர், டிசம்பர் 10 ( பெர்னாமா) -- இன்று மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பீமி அவாங் அலி பாசா முன்னிலையில் இரண்டு துணை அமைச்சர்கள் இரண்டாவது தவணையாக மேலவை உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் தங்களின் செனட்டர் பதவிகளைத் தொடர்கின்றனர்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 45(3) மற்றும் 45(3A)-இன் கீழ் இரு துணை அமைச்சர்களின் மறுநியமனம் இன்று முதல் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்று மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பீமி தெரிவித்தார்.

''கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 45(1)(b) இன் கீழ், மாட்சிமை தங்கிய மாமன்னரால் இந்த நியமனம் செய்யப்பட்டது. உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற வாழ்த்துக்கள். சேவையில் சிறந்து விளங்குங்கள்.'' என்றார் டத்தோ அவாங் பீமி அவாங் அலி பாசா

மேலும், இவ்விரு அமைச்சர்களின் முதல் தவணைக்கான பதவியேற்பு சடங்கு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)