கூலாய், 10 டிசம்பர் (பெர்னாமா) - ஜோகூர், கூலாய் பேருந்து முனையத்தில் உள்ள பெண் கழிவறையில், நேற்று அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும், வங்காளதேச ஆடவரை போலீசார் கைது செய்தனர்.
பிற்பகல் மணி 1.10 அளவில், 35 வயதான அந்த வங்காளதேச ஆடவர், கோலாலம்பூரிலிருந்து வந்த பேருந்தில் இருந்து இறங்கியது கண்டறியப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி தான் செங் லீ, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தம்முடன் ஒரு துணிப் பையையும் கொண்டு வந்திருந்த அவ்வாடவர், கழிவறைக்குள் நுழைவதற்கு முன்னதாக, அதை ஓர் இருக்கையில் வைத்து சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பிற்காக கைது செய்யப்பட்ட அவ்வாடவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் நேரத்தின்போது பெண்கள் யாரும் இல்லாத கழிவறைக்குள் அந்நபர் தவறுதலாக நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக, கழிவறைக்குள் புகுந்த அவரை பொதுமக்கள் விசாரித்த வேளையில், குழப்பமான மனநிலையுடன் அவ்வாடவர் காணப்பட்ட 35 விநாடி காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)