அரசியல்

சைட் சாடிக் விடுவிப்பு தொடர்பிலான அரசு மேல்முறையீடு குறித்து இன்று  செவிமடுப்பு

11/12/2025 04:11 PM

புத்ராஜெயா, டிசம்பர் 11 (பெர்னாமா) -- பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு, அர்மாடாவின் நிதி தொடர்பான நம்பிக்கை மோசடி, சொத்துக்குவிப்பு, கள்ளப்பண பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானை விடுவித்தது தொடர்பிலான அரசு தரப்பின் இறுதி மேல்முறையீடு குறித்து இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டது.

இன்று காலை மணி 9.30 அளவில் தொடங்கிய வழக்கு விசாரணையில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டத்தோ அபு பாக்கார் ஜாயிஸ் தலைமையேற்றார்.

இன்று காலை மணி 8.26 அளவில் இரண்டு ஆதரவாளர்கள் மற்றும் பெற்றோருடன் 33 வயதுடைய சைட் சாடிக் நீதிமன்றத்திற்கு வருகைப் புரிந்தார்.

நாளை வரை இரண்டு நாட்களுக்கு இவ்வழக்கு விசாரணை தொடரப்படுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி, உயர் நீதிமன்றம் வழங்கிய, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இரண்டு பிரம்படி மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதத்தை ரத்து செய்ய சைட் சாடிக் செய்த மேல்முறையீட்டிற்கு அனுமதி அளித்து கடந்த ஜூன் 25ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்து விடுதலை செய்தது.

அத்தீர்ப்பிற்கு மறுநாள், அதை எதிர்த்து தேசிய சட்டத்துறை கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)