பொது

31 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

12/12/2025 04:28 PM

கோலாலம்பூர், 12 டிசம்பர் (பெர்னாமா) -- நேற்று, கோலாலம்பூர், மஸ்ஜிட் ஜாமேக் பகுதியைச் சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மூன்று பெண்கள் உட்பட 31 சட்டவிரோத குடியேறிகளை, மலேசிய குடிநுழைவுத் துறை J-I-M கைது செய்தது.

 மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.தி இலகு ரயில் நிலையத்தைச் சுற்றி இரவு மணி 7.20-க்கு, 25 உறுப்பினர்களை உட்படுத்தி ஓ.பி.எஸ் கூதிப் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, கோலாலம்பூர் மலேசிய குடிநுழைவுத் துறையின் இயக்குநர் வான் முஹமட் செளபீ வான் யூசோப் கூறினார்.

ரயிலில் இருந்து இறங்கிய வெளிநாட்டினர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு தெரு முனையிலும் இருந்தவர்களிடம், சாதாரண முறையில் மொத்தம் 60 பேர் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பெர்னாமா தொடர்புக் கொண்ட போது வான் முஹமட் செளபீ தெரிவித்தார்.

வங்காளதேசத்தைச் சேர்ந்த 11 பேர், இந்தியாவைச் சேர்ந்த 8 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த எழுவர், இந்தோனேசியாவைச் சேர்ந்த மூவர், சூடான் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டதாக, அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் சட்டவிரோதமாக கூடுதல் காலம் நாட்டில் தங்கிய குற்றத்திற்காக 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் செக்‌ஷன் 15(1)(சி)-இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.

எஞ்சியவர்கள், முறையான கடப்பிதழைக் கொண்டிருக்காததால் அதே சட்டம் செக்‌ஷன் 6(1)(சி)-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)