அரசியல்

ஐ.பி.எஃப் கட்சியை உறுப்பு கட்சியாக இணைத்து கொள்ளும் காலம் கனிந்து விட்டது

14/12/2025 06:35 PM

செமினி, 14 டிசம்பர் (பெர்னாமா) --  நீண்ட காலமாக தோழமைக் கட்சியாக இருந்து வரும் ஐ.பி.எஃப் எனப்படும் மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சியை, தேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக இணைத்து கொள்ளும் காலம் கனிந்து விட்டது.

இக்கட்சியைத் தோற்றுவித்த டான் ஶ்ரீ எம்.ஜி. பண்டிதன், முன்னாள் தலைவர் மறைந்த டத்தோ எம்.சம்பந்தன் ஆகியோருடன் நடப்புத் தலைவர் டத்தோ டி. லோகநாதன் வரை அனைவருமே தேசிய முன்னணிக்கு இதுநாள் வரை காட்டும் விசுவாசத்திற்குப் பிரதிபலனாக இது அமையும் என்று தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக இணைவது, ஐ.பி.எஃப்-பின் 35 ஆண்டுக்கால கனவாக இருந்து வரும் நிலையில், துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பு கட்சியின் எதிர்காலத்திற்கு ஊக்குவிப்பாக அமைவதாக, அதன் தலைவர் டத்தோ டி. லோகநாதன் கூறினார்.

''ஏறக்குறைய ஒரு 35 ஆண்டுகளாக தேசிய முன்னணியில் இணைவதற்கு விண்ணப்பித்திருக்கின்றோம். பல பேராளர் மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தோம். அவர்கள் கலந்துரையாடல் நடத்தி தான் தீர்மானம் எடுக்க முடியும் எனவே காத்திருக்குமாறு கூறினர். ஆசைப்பட்டாலும் நாம் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதனால், நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்'', என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர், செமினியில் உள்ள Setia Ecohill மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஐ.பி.எஃப் கட்சியின் 33-வது தேசிய பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட லோகநாதன் அதனை கூறினார்.

இம்மாநாட்டில், இந்திய சமுதாய நலன் சார்ந்த பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், 16-வது பொது தேர்தலில் ஐ.பி.எஃப் கட்சி போட்டியிடுவதற்கான தொகுதிகளை வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சியில் இந்திய இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க, ஐ.பி.எஃப் கட்சி இதுவரை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில், அதனை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக, கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் கணேஷ்குமார் சம்பந்தன் கூறினார்.

''இந்த காலக்கட்டத்தில் சமுதாயத்தில் இந்திய இளைஞர்கள் யாரும் தயங்கி நிர்காமல் அனைவரும் முன்வர வேண்டும். சமூக ஊடகங்கள் இருக்கின்றன. முன்வந்தீர்கள் என்றால் அரசியல் தலைவர்களாக இருக்கும் நாங்கள் உங்களை அடையாளங்கண்டு, வாய்ப்புகளை வழங்குவோம்'', என்று அவர் கூறினார்.

8 மாநிலங்களிலுள்ள 56 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 750-க்கும் மேற்பட்ட பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)