ஜாலான் பார்லிமன், டிசம்பர் 16 (பெர்னாமா) -- நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியாக நிழல் பொருளாதாரத்தைச் சமாளிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதில் ஒன்று கடந்தாண்டு தொடங்கிய E-INVOIS எனப்படும் மின்-விலைப்பட்டியல் முறை செயலாக்கம் ஆகும்.
மின்-விலைப்பட்டியலை நடைமுறைப்படுத்தப்படுவதன் நோக்கம் முன்னேற்றமான நிர்வாகத்தை வலுப்படுத்தி வரிவிதிப்பு செயல்முறையை இலக்கவியல் மயமாக்கலை விரைவுபடுத்துவதோடு நிழல் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த உதவுவதும் ஆகும் என்று நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
''ஆனால் இப்போதைக்கு அது இன்னும் முழுமையாகத் தொடங்கப்படாததால் அடையாளம் காண முடியவில்லை. எனவே நிழல் பொருளாதாரத்தைச் சமாளிப்பதால் நமக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் நாம் சிந்தித்து பார்க்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம்'', என்றார் லிம் ஹுய் யிங்.
நாட்டின் வருமானம் அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக நிழல் பொருளாதாரம் மீதான அரசாங்க நடவடிக்கைகள் குறித்து இன்று மேலவையில் செனட்டர் ரீதா சரிமாஹ் அனாக் பேட்ரிக் இன்சொல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே எதிர்காலத்தில் வரி அடிப்படையை விரிவுபடுத்தவும் நாட்டின் வருவாயை அதிகரிக்கவும் இம்முயற்சியின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான தொடர் கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் லிம் மேலும் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)