கோலாலம்பூர், 16 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில், இந்திய சமுதாயத்தை பிரதி-நிதித்து, துணை அமைச்சர் ஒருவர் அமைச்சராகவும் மற்றொருவர் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனிதவள அமைச்சராகவும், யுனேஸ்வரன் ராமராஜ் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, தங்கள் மீது நம்பிக்கை வைத்து, இப்பொறுப்வை வழங்கிய பிரதமருக்கு, ரமணனனும் யுனேஸ்வரனும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதேவேளையில், நாட்டில் தொழிலாளர் மேம்பாட்டை உறுதிசெய்வதில், மடானி மலேசியா கொள்கைக்கு ஏற்ப விரிவான, உள்ளடக்கமான மற்றும் போட்டியாற்றல்மிக்க ஆள்பலத்தை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய கடப்பாடாக இந்த நியமனம் அமைந்துள்ளதை டத்தோ ஶ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
அதோடு, பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டப் பின்னர், விரைவில் மனிதவள அமைச்சின் உயர் தலைமைத்துவத்துடன் சந்திப்பு நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய சமூகம் உட்பட மலேசியர்களின் நம்பிக்கைகளை உறுதி செய்வதற்காக, தமக்கு வழங்கப்பட்ட இப்பொறுப்பை முழு அர்ப்பணிப்புடம் ஆற்றவிருப்பதாக ரமணன் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)