ஈப்போ, டிசம்பர் 17 (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் உள்ள உறுப்பினர்களின் நல்வாழ்விற்கு மட்டுமின்றி அம்மாநில மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் மையமாகவும் விளங்கும் புதிய அலுவலகத்தை மக்கள் முற்போக்கு கட்சி பிபிபி நேற்று அம்மாநிலத்தில் திறந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு கட்சி உருமாற்றம் கண்டதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு டத்தோ டாக்டர் லீ ஹெங் பேராக் மாநில கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் இந்த அலுவலகத்தைத் திறந்ததாக அக்கட்சியின் தலைவர் டத்தோ லோகபால மோகன் தெரிவித்தார்.
''மக்களுக்கும் பிபிபி அங்கத்தினருக்கும் சேவை செய்வதற்கு இக்கட்சியின் அலுவலகத்தைத் திறந்து வைத்திருக்கின்றார்'' என்றார் டத்தோ லோகபால மோகன்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் பாராது மக்கள் சேவை ஆற்றி வரும் பிபிபி கட்சி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால் பலரும் அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைவதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறினார்.
நேன்று மாலை பேராக் ஈப்போவில் மாநில கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு பேசினார்.
கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் பொறுப்பாளர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இதனிடையே தேசிய முன்னணியில் தொடர்ந்து நிலைத்து நின்றாலும் தலைமைத்துவம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில காலமாக அதனுடன் எவ்வித கூட்டு நடவடிக்கையையும் பிபிபி மேற்கொள்ளாமல் இருந்தது.
தற்போது தேசிய முன்னணியில் தொடர்ந்து செயலாற்றுவதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்று வரும் வேளையில் ஒரு மாதத்திற்குள் அதற்கான முடிவு தெரிந்துவிடும் என்று தாம் நம்புவதாகவும் லோகபால மோகன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)