புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர் 18 (பெர்னாமா) -- இம்மாதத் தொடக்கம், செபெராங் ஜெயா-வில் தனது மனைவியைக் கொலை செய்ததாக வேலையில்லா ஆடவர் ஒருவர் இன்று, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மஜிஸ்த்ரேட் நூருல் ரஷீடா முஹமட் அகிட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டு புரிந்ததாக, கைருல் ரிஸுவான் அப்துல்லா தலையசைத்தாலும், கொலை வழக்கு உயர்நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த டிசம்பர் எட்டாம் தேதி மாலை மணி நான்கு அளவில், செபெராங் ஜெயா, தூனா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் 44 வயதான வான் கைருல் சாஃபினா ஈஷாக்-ஐ கொலை செய்ததாக கைருல் ரிஸுவான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது 30-இல் இருந்து 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
மரணத் தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 12-க்கும் குறையாத பிரம்படிகளை விதிக்கவும் அந்த செக்ஷன் வகைச் செய்யும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ஜாமின் வழங்கப்படாத நிலையில், பிரேதப் பரிசோதனை மற்றும் வேதியியல் அறிக்கைகளுக்காக, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு பிப்ரவரி பத்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)