விளையாட்டு

சீ போட்டி; அம்பெய்தும் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

18/12/2025 05:58 PM

தாய்லாந்து, டிசம்பர் 18 (பெர்னாமா) -- 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றது.

இன்று நடைபெற்ற ஆடவருக்கான அம்பெய்தும் போட்டியில் தேசிய ஆடவர் குழு உபசரனை நாடான தாய்லாந்துடன் மோதியது.

தேசியக் குழுவை பிரதிநிதித்து  ஜுவாய்டி மசுக்கி, முஹமட் சியாபிக் எம்டி அரிஃபின்,முஹமட் அய்மான் சியாஃபிக் தாரிகி மற்றும் அலங் அரிஃப் அகில் முஹமட் கசாலி ஆகியோர் களமிறங்கினர்.

தாய்லாந்து அணியில் சிராபாப் சனக், சிப்பக்கோர்ன் கோகேவ், பீரபட் பட்டணபோங்கியட் மற்றும் ரத்தண்டனை வோங்டனா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில், 232-க்கு 228 என்ற நிலையில் மலேசியா தங்கம் வென்றது. போட்டி முழுவதும் பலத்த காற்று வீசினாலும் தமது சகாக்கள் வெளிப்படுத்திய திறன் அணியின் வெற்றிக்கு வித்திட்டதாக ஜுவாய்டி மசுக்கி  கூறினார்.

''யாரும் மெத்தனமாக விளையாடவில்லை. அனைவரும் மிக மிக உறுதியானவர்கள். தாய்லாந்து அணி கூட, ஒரே ஒரு அம்பை நழுவவிட்டது. அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி கடைசி அம்பு வரை எங்களால் முடிந்ததைச் செய்தோம்.'' என்றார் ஜுவாய்டி மசுக்கி

இந்த வெற்றியின் மூலம் சீ விளையாட்டுப் போட்டிகளில் ஜுவாய்டி மசுக்கி  தமது எட்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)