சிறப்புச் செய்தி

அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை; உள்துறை அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவோம் - ரமணன்

18/12/2025 06:44 PM

புத்ராஜெயா, நவம்பர் 18 (பெர்னாமா) -- இந்திய உணவகங்கள், முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் நகை கடைகளில் நிலவும் தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்துறை அமைச்சுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் துறையினர் அந்நியத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை முறையாக செய்ய வேண்டும் என்றும் அவை நிச்சயமாக உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

''சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். சில வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, தொழிலாளர்கள் தங்குமிடம். அவர்கள் எங்கு தங்குகிறார்கள். எப்படி வேலைக்குச் செல்கிறார்கள். சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை எல்லாம் பூர்த்தி செய்தால் நாங்கள் உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைப்போம்,'' என்றார் அவர்.

இன்று, புத்ராஜெயாவில் மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் வருகை நேரப் பதிவு மற்றும் உயர் நிர்வாகத்தின் விளக்கமளிப்பை கேட்ட பின்னர், நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ ரமணன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதனிடையே, வரும் இரண்டு ஆண்டுகளில் 2026 - 2035-ஐ தேசிய மனித வளக் கொள்கையை உருவாக்குவது உட்பட Gig எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதாரத் துறை ஊழியர்களுக்கு ஆலோசனை மன்றம் மற்றும் நடுவர் மன்றம் அமைப்பது ஆகியவை மனிதவள அமைச்சின் முன்னுரிமைகளில் அடங்கும்.

வளர்ந்து வரும் gig தொழில்துறைக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு நியாயமான மற்றும் கவனம் செலுத்தும் நிர்வாகமாகவும் பிரச்சனைகளை தீர்வுக் காணும் ஒரு முறையாகவும் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப gig தொழிலாளர்களின் நலன் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)