கோலாலம்பூர், டிசம்பர் 19 (பெர்னாமா) -- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வரும் டிசம்பர் 23 மற்றும் 24-ஆம் தேதிகளில், தனிநபர் வாகனங்களுக்கான டோல் கட்டணத்திற்கு 50 விழுக்காட்டு கழிவை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பினாங்கு பாலத்தில் இரண்டாம் வகுப்பு வாகனங்களுக்கும், பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் தன்ஜோங் கூபாங் டோல் சாவடி, மலேசியா-சிங்கப்பூர் இரண்டாம் பாதை, LINKEDUA ஆகியவைத் தவிர்த்து, அனைத்து டோல் சாவடிகளிலும் முதலாம் வகுப்பு வாகனங்களுக்கும் இக்கழிவு வழங்கப்படுகிறது.
அனைத்து நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு, இதனால் ஏற்படும் சுமார் இரண்டு கோடியே 65 லட்சம் ரிங்கிட் நிதித் தாக்கத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ செரி அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
பண்டிகை காலங்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் போக்குவரத்தைக் குறைப்பதையும், ஓய்வெடுக்கும் பகுதிகளில் நெடுஞ்சாலை செயல்பாடுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு டோல் கட்டணக் கழிவுக்கான தேதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)