சிறப்புச் செய்தி

தொல்காப்பிய சிந்தனையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுச் சேர்க்க இளையோர் கருந்தரங்கு...

21/12/2025 06:35 PM

கோலாலம்பூர், நவம்பர் 21 (பெர்னாமா) -- தொல்காப்பியத்தின் சிந்தனையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 2025ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியம்; இளையோர் கருந்தரங்கு ஒன்று, நேற்று சனிக்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் ஏற்பாட்டிலான இக்கருத்தரங்கு, இளைஞர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதவும் படைக்கவும் மிகவும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று அதன் ஏற்பாடு குழு தெரிவித்துள்ளது.

எழுத்து, சொல், பொருள் என்று, மூன்று அதிகாரங்களை இலக்கண விதிகளோடு, மிகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் எடுத்துரைத்த ஓர் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் விளங்குகிறது.

தொன்மையான அந்நூல் குறித்து தெரிந்துக் கொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும், இளைய சமுதாயத்தினர் முன் வரும்போது வரலாறுகள் மறக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய முடியும் என்று மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தின் தலைவர் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம் தெரிவித்தார்.

''இந்தப் பயிலரிங்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தொல்காப்பியம் தொடர்பான வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், அது தொடர்பான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுத வேண்டும். தொல்காப்பியத்தில் வழங்கப்பட்டுள்ள செய்திகளை வெளிக்கொணர்ந்து பரவலாக்கம் செய்ய வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன்தான் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது,'' என்றார் அவர்.

இதனிடையே, தொல்காப்பியம் மிகக் கடினமான நூல் என்று கருதுவதைத் தவிர்த்து, ஓர் எளிமையான காப்பியம் என்பதை அனைத்து தரப்பினருக்கும் உணர்த்த வேண்டும் என்று இந்திய ஆய்வியல் துறை கலைப்புலத்தின் முதுநிலை விரிவுரையாளரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான முனைவர் அனுராதா கூறினார்.

''நமது பாரம்பரியம், தமிழ் மரபு ஆகியவை அறிவியல், சுற்றுச்சூழலை சார்ந்து இருக்கிறது. இவை அனைத்திற்கும் நல்ல ஆய்வு கட்டுரைகளை எவ்வாறு திரட்ட முடியும்? ஆராய்ச்சி முறை என்ன? என்பதை ஓர் அறிமுகமாக இந்தப் பயிலரங்கில் பகிர்ந்து கொண்டோம்,'' என்றார் அவர்.

இதனிடையே, இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவில் சனிக்கிழமை காலை 8.30 மணி தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இக்கருத்தரங்கில் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட சுமார் 44 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)