கே.எல்.ஐ.ஏ, டிசம்பர் 22 (பெர்னாமா) -- ஒவ்வொரு ஆண்டும் மலேசியாவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் யாத்திரைக்காகச் சபரிமலைக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
அவர்களின் பயணத்தை எளிமையாக்கும் விதமாகக் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIAவில் ஒரு சிறப்பு வழித்தடத்தை மீண்டும் நிறுவுவதற்கு Malaysia Airports Holdings நிறுவனம் MAHB உடன் இணைந்து போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் குணராஜ் ஜோர்ஜ் அறிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகளை விரைவாக முடிப்பதற்கு இந்த சிறப்பு வழித்தடம் ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என்று குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
''அவர்களுக்கென AirAsia, Batik Air மற்றும் AirAsia விமான நிறுவனங்களின் விமான நிலையங்களில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர்களுடன் கலந்துரையாடினோம்; கடந்த ஆண்டின் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். எதைச் செய்யலாம், எவற்றைச் செய்யக்கூடாது என்பதைக் குறித்து குழுவினருக்கு அவர்கள் அறிவுரை வழங்கினர், ஏனெனில் இது ஒரு பொது இடமான டெர்மினல் என்பதால், அதிகமான மக்கள் வருகை தருவார்கள். ஆகவே, சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டால் அனைவருக்கும் எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது,'' என்றார் முனைவர் குணராஜ் ஜோர்ஜ்.
கடந்த ஆண்டும் போக்குவரத்து அமைச்சு சிறப்பு வழித் தடத்தை ஏற்பாடு செய்து தந்தது.
இதனிடையே அரசாங்கம் செய்து கொடுக்கும் வசதிகளையும் சலுகைகளையும் ஐயப்ப பக்தர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவை சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி பக்தர்களைக் கேட்டுக் கொண்டார்.
''நமது மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவை சங்க இயக்கத்தின் மூலம் ஒரு குறுந்தகவல் அறிக்கை உருவாக்கப்படும். அதில் நீங்கள் எந்த தேதி மற்றும் எந்த நாளில் திரும்பிச் செல்லவிருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பதன் மூலம் அதற்கேற்ற வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும். இவ்வேளையில் அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது'', என்றார் யுவராஜா குருசாமி.
எனவே, ஐயப்பன் பக்தர்களை அங்கீகரித்து போக்குவரத்து அமைச்சு வழங்கியிருக்கும் இம்முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)