பொது

ஈராண்டுகளில் 1,550 கோடி ரிங்கிட் வருமானம்

24/12/2025 07:24 PM

கோலாலம்பூர், டிசம்பர் 24 (பெர்னாமா) -- ஊழல், மோசடி மற்றும் முறையற்ற வணிகக் கூட்டமைப்பிற்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் வழி கடந்த இரண்டு ஆண்டுகளில் மடானி அரசாங்கம் 1,550 கோடி ரிங்கிட் வருமானத்தை மீட்டெடுத்துள்ளது.

நாட்டிற்குச் சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் உயர்பதவி வகிப்பவர்கள் உட்பட சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது என்பதைப் பல்வேறு அமலாக்க நிறுவனங்கள் மூலம் கைப்பற்றப்பட்ட பணம், சொத்துகள், பங்குகள் மற்றும் அபராதங்கள் காட்டுகின்றன.

குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வருமானம் திருடப்படுவதோ அல்லது கடத்தப்படுவதோ தொடர்பான பிரச்சினையைக் கையாள்வதில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியான தலைவராக அறியப்பட்டவர்.

மேலும், ஊழல், கடத்தல், கடத்தல் கும்பல் மற்றும் முறையற்ற வணிகக் கூட்டமைப்பு ஆகியவற்றில் எந்தவொரு தளர்வும் இல்லாமல் கடுமையாக செயல்பட வேண்டும் என எப்போதும் அமலாக்க நிறுவனங்களுக்கு அவர் வலியுறுத்தி வருகிறார்.

நாட்டின் வருமானத்தைத் திரும்பப் பெறுவதிலும் பொது நிதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளிலும் மடானி அரசாங்கம் அடைந்த வெற்றியில் 1MDB வழக்கு அடங்கும்.

இவ்வழக்கில் கோடிக் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்கள் நாட்டிற்குத் திரும்பக் கிடைத்தன.

சொத்தை மீட்பதற்கான அறக்கட்டளைக் கணக்கு AA MKA நிறுவப்பட்டதில் இருந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் 1MDB மற்றும் SRC International நிறுவனம் தொடர்பான மொத்தம் 3,120 கோடி ரிங்கிட் மதிப்புடைய நிதி வெற்றிகரமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அத்தொகையில் 1240 கோடி ரிங்கிட்டிற்கும் மேல் 2022 லிருந்து 2025ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதில் மடானி அரசாங்கம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் உட்பட அனைத்து அமலாக்க அமைப்புகளுக்கும் எப்போதும் முழு ஆதரவை வழங்கி வருகிறது.

அண்மையில் முன்னாள் பிரதமர்கள், அமலாக்க அதிகாரிகள் மற்றும் வங்கி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட விசாரணைகள் மூலம் இவ்வாண்டில் நவம்பர் 30ஆம் தேதி வரை 840 கோடி ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை எஸ்.பி.ஆர்.எம் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)