புடு, 25 டிசம்பர் (பெர்னாமா) -- அமைதியின் அரசராய், அன்பின் சிகரமாய், தாழ்ச்சியின் வடிவாய், மனித ரூபத்தில் மண்ணில் பிறந்த குழந்தை இயேசுவை இன்று வீடுகளில் கொண்டாடுவதற்கு முந்தைய நாளில், உலகமெங்கிலும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்பர்.
அந்த வகையில், நேற்று கோலாலம்பூர், புடுவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலி களைக்கட்டி இருந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவில் ஒன்றாக தேவாலையங்களில் கூடி குழந்தை இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பது கிறிஸ்துவர்களின் வழிபாட்டில் ஓர் அங்கமாகும்.
உலகத்தை அறியாமையில் இருந்து மீட்க தேவ ஒளியாக இயேசு கிறிஸ்து இருளில் தோன்றியதாகவும், அனைவரின் வாழ்வில் இருக்கும் துன்பங்களை இயேசு கிறிஸ்து அகற்றி, தன்னுடைய அருளை வழங்குவார் என்பது நம்பிக்கையாகும் என்று தேவாலயத்தின் துணைப் பங்குத்தந்தை மறைத்திரு மைக்கல் தாஸ் கூறினார்.
''ஆண்டவர் இயேசு இவ்வுலகிற்கு ஒளிக் கொடுக்க வந்தார். ஏனென்றால், நமக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள், இன்பங்கள், துன்பங்கள், வாழ்க்கை முறைகள் இவை அனைத்தும் இருளில் தான் இருக்கின்றோம். நாம் கேட்கவில்லை. அதுவாக, வந்து சேர்கின்றது. எனவே, அவருடைய பிறப்பு ஒளி'', என்று அவர் கூறினார்.
மேலும், கடந்த ஓராண்டு காலமாக தங்கள் வாழ்க்கையில் பல துன்பங்களை எதிர்கொண்ட மக்கள், அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கான திருப்பலிகள், இந்நாளில் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
''கடவுளுடைய அன்பு, கடவுளுடைய அருள், கடவுளுடைய ஒளி இதற்கு மக்கள் ஏங்குகின்றனர். குடும்பங்கள், பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்திக்கின்றனர். எனவே, மக்களுக்கு எவ்வாறு கடவுளுடைய அன்பு, ஒளி மற்றும் கடவுளுடைய மன்னிப்பு ஆகியவற்றை எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என்ற நோக்கத்துடன் நாங்கள் செயல்படுகின்றோம்'', என்றார் அவர்.
பரிசுகளையும் வாழ்த்துகளையும் பரிமாறி கொள்ளும் அதே வேளையில், உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் ஒன்றாக சேர்ந்து இப்புனித தினத்தை அர்த்தமுள்ளதாக கொண்டாடுவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தேவாலயத்திற்கு வந்திருந்த சிலர் கூறினர்.
''எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. குறிப்பாக பங்குத்தந்தையின் ஆசிர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது'', என்று கோலாலம்பூரைச் சேர்ந்த நத்தாஷா கிறிஸ்டி சுப்ரமணியம் கூறினார்.
''இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. திருப்பலியில் கலந்து கொண்டு, பின்னர் வீட்டிற்குச் சென்று இன்னும் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்'', என்றார் பூச்சோங்கைச் சேர்ந்த ஜெனிஃபர் அந்தோணி.
இதனிடையே, கிறிஸ்துமஸ் பெருநாளின் மறக்க முடியாத அனுபவங்களையும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.
''ஒவ்வொரு ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையும் எனக்கு மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுக்கும். அதில், உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை முதல்முதலில் வைத்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது'', என்று ஶ்ரீ பெட்டாலிங்கைச் சேர்ந்த நேசன் பெரியநாயகம் கூறினார்.
''இம்முறை பண்டிகையில் என்னுடைய தந்தை என்னுடன் இல்லை என்பதுதான் எனக்கு வருத்தம். அவர் எங்களோடு தான் இருக்கின்றார். உயிர்த்த ஆண்டவர் இன்னும் எங்களோடு மீண்டும் பிறக்கின்றார் என்ற ஞாபகங்களோடு இருக்கின்றோம்'', என்றார் அம்பாங்கைச் சேர்ந்த அலெக்சாண்டர் மரி சூசேய்.
சிறப்பு அலங்காரங்கள், வண்ண வண்ண விளக்குகள், வித விதமான நட்சத்திரங்கள், குழந்தை இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் அடையாளங்கள், திரளான மக்கள் கூட்டத்தார் என்று தேவாலயத்தின் கிறிஸ்துமஸ் திருப்பலியை ஒளிமயமாக காட்சியாக மாற்றியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)