உலகம்

சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான முதற்கட்டக் கூட்டத்தில் தாய்லாந்து மற்றும் கம்போடியா அதிகாரிகள்

25/12/2025 06:15 PM

பேங்காக், டிசம்பர் 25 (பெர்னாமா) -- சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான முதற்கட்டக் கூட்டத்தில் தாய்லாந்து மற்றும் கம்போடியா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அவ்விரு நாடுகளுக்கும் எல்லை தாண்டிய மோதல்கள் தொடரும் நிலையில், இந்த முதற்கட்ட சந்திப்பு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து எல்லைப் பகுதியில் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

செயலக அளவிலான இக்கூட்டம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று தாய்லாந்து தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியிருந்தார்.

முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்றால், சனிக்கிழமை இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவின் இவ்விரு அண்டை நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் மோதலை தீர்க்க, இந்த அரச தந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கக் கூடியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தாய்லாந்து மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை கம்போடிய பொதுமக்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 87 பேர் காயமடைந்துள்ளதாகவும் கம்போடியாவின் தகவல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், தமது தரப்பில் 23 இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 42 பேரும் மாண்டதாகத் தாய்லாந்து இராணுவம் தெரிவித்திருக்கிறது.

மற்றொரு நிலவரத்தில், தாய்லாந்து எல்லை அருகே இருந்த சிலையை தாய்லாந்து இராணுவம் தாக்கி அழித்துள்ளதாக கம்போடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் இந்து மக்களின் வழிப்பாட்டிற்காக அந்த சிலை அங்கு நிறுவப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

29 அடி உயரமான இந்த அந்த சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றும் காணிளி ஒன்றும் சமூக ஊடகத்தில் பரலாக பகிரப்பட்டு வருகிறது.

தாய்லாந்து எல்லையிலிருந்து 100மீட்டர் தொலைவில் இருந்த அச்சிலை 2014-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தாய்லாந்து இராணுவத்தின் இச்செயலுக்கு, இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)