பொது

விருந்துபசரிப்பின் போது மண்டபத்தில் தீ விபத்து

25/12/2025 03:57 PM

மலாக்கா, 25 டிசம்பர் (பெர்னாமா) --  நேற்றிரவு, மலாக்கா, புக்கிட் கட்டிலில் உள்ள ஒரு தங்கும் விடுதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசரிப்பின் போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தங்கள் தரப்பிற்கு இரவு மணி 8.14-க்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, மலாக்கா மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் பொது தொடர்பு அதிகாரியும், இரண்டாவது துணைத் தீயணைப்பு தலைவருமான முஹமட் ஹஃபிட்சாதுல்லா ரஷிட் கூறினார்.

தீ விபத்து குறித்து தகவல் பெற்றதைத் தொடர்ந்து, புக்கிட் கட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முஹமட் ஹஃபிட்சாதுல்லா குறிப்பிட்டிருந்தார்.

மண்டபத்திற்குள் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, பின்னிரவு மணி 12.20-க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக, அவர் கூறினார்.

தீ சம்பவத்தினால் சம்பந்தப்பட்ட தங்குமிடத்தின் முன் மற்றும் பின்புற பகுதிகள் 20 விழுக்காடு சேதமடைந்ததாக, முஹமட் ஹஃபிட்சாதுல்லா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, புக்கிட் கட்டில் மற்றும் ஆயர் கெரோ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 16 உறுப்பினர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக, அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட ஒரு நிறுவன ஊழியர்களின் விருந்துபசரிப்பின் போது இத்தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தீ பரவுவதற்குள் அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டதாகவும், ஒருவர் மட்டும் சீராய்ப்பு காயங்களுக்கு ஆளானதாக முஹமட் ஹஃபிட்சாதுல்லா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)