பொது

எம்.சி.எம்.சி & சமூக ஊடக தளங்களின் ஒத்துழைப்பில் 'SANDBOX' திட்டம்

27/12/2025 05:11 PM

புத்ராஜெயா, டிசம்பர் 27 (பெர்னாமா) -- இலக்கவியல் துறையில் சிறார்கள் மற்றும் பயனர்கள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகளை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்னதாக அதனை மதிப்பீடு செய்ய அரசாங்கம் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி Sandbox எனும் ஓர் ஒழுங்குமுறை சோதனை திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இந்த அணுகுமுறையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி மற்றும் அடையாளம் காணப்பட்ட சில சமூக ஊடக தளங்கள் இணைந்து செயல்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்சில் தெரிவித்தார்.

''அப்பாதையையே நாங்கள் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அடுத்த மூன்று மாதங்களில் நடைபெறவுள்ள இந்நடவடிக்கை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி மற்றும் சமூக ஊடக தளங்களாக அடையாளம் காணப்பட்ட அனைத்து தளங்களுக்கும் இடையிலான ஒரு ‘Sandbox’ செயல்முறையாக இருக்கும். இதன் நோக்கம் குறிப்பாகப் பிள்ளைகளுக்காக இணையத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற எங்கள் இலக்குகளைத் தற்போது இச்சமூக ஊடக தளங்கள் கொண்டுள்ள திறன்கள் மற்றும் கருவிகளுடன் பொருந்தச் செய்வதற்காகவே ஆகும்”, என்றார் டத்தோ ஃபாமி ஃபட்சில்.

இந்நடவடிக்கை அரசாங்கத்திற்கும் தள வழங்குநர்களுக்கும் தற்போது உள்ள தொழில்நுட்ப திறன்களை மதிப்பீடு செய்வதோடு ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளைச் சோதிப்பதற்கும் வாய்ப்பளிப்பதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)