பொது

நகைக் கடையில் திருட்டு; சந்தேக நபர் கைது

27/12/2025 05:10 PM

டுங்குன், டிசம்பர் 27 (பெர்னாமா) -- திரெங்கானு பாக்கா பகுதியில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த வியாழக்கிழமை சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயது நபர் அங்கிருந்த வாடிக்கையாளரால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 

சம்பவம் நடந்த இடத்தில் மதியம் 12.20 மணி அளவில் அச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டென்ட் மைஸுர அப்துல் காதிர் தெரிவித்தார்.

தொப்பி மற்றும் முகமூடி அணிந்திருந்த அச்சந்தேக நபர் நகை வாங்குவது போல் நடித்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தார்.

பின்னர், கடை ஊழியரிடம் இருந்து சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு ஓட முயன்றிருக்கின்றார்.

நகைக் ​​கடையின் தானியங்கி கதவைக் கடை ஊழியர் வெற்றிகரமாகப் பூட்டிய பிறகும் கூட அச்சந்தேக நபர் தப்பிக்கத் தவறிவிட்டதாகவும் வாடிக்கையாளர்களில் ஒருவர் நிபுணத்தன்மையுடன் சந்தேக நபரை விரைவில் கைது செய்ததாக மைஸுர கூறினார்.

சந்தேக நபர் தப்பியோட முயன்றாலும் அந்தக் கடையின் கதவைப் பணியாளர்கள் உடனடியாக பூட்டியபோது அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் வேகமாக ஓடி சந்தேக நபரைப் பிடித்ததால் அந்த ஆடவர் தப்பிக்க முடியாமல் போனது.

அந்நபர் தமது மாமாவின் பெயரில் போலி பதிவு எண்ணுடன் ஒரு காரைப் பயன்படுத்துவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 380இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)