கோலாலம்பூர், டிசம்பர் 28 (பெர்னாமா) -- இவ்வாண்டு நாட்டில் இந்திய சமூகம் சார்ந்த பல்வேறு சாதனைகளும், இழப்புகளும் சமூக-பொருளாதாரத் திட்டங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களின் சாதனைகள் ஒவ்வோர் ஆண்டும் பிரமிக்க வைக்கும் வேளையில், இவ்வாண்டும் இடைநிலைப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.
தைவான், தைப்பேவில் நடைபெற்ற 2025 உலக எந்திரன் விளையாட்டுப் போட்டியில், இந்திய மாணவர்கள் 80 பதக்கங்களை வென்றனர்.
10 நாடுகளைச் சேர்ந்த 1000 பேர் கலந்து கொண்ட இப்போட்டி நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் முதலாம் தேதி வரை நடைபெற்றது.
அதேவேளையில், HONG KONG-கில் நடைபெற்ற அனைத்துலக இளம் புத்தாக்கக் கண்டுபிடிப்புப் போட்டியில், மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட ஒரே தமிழ்ப்பள்ளியான, ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்களான சஞ்சனா ஜெகதீஸ்வரனும் லக்ஷன் சண்முகநாதனும் தங்களின் கண்டுபிடிப்பிற்காக ஹங்காங் சிறப்பு விருது, தங்கப் பதக்கம், மற்றும் 800 ஹங் கோங் டாலர் ரொக்கத்தையும் வென்றனர்.
இயங்கலை வழி நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு WINSTEM அனைத்துலக புத்தாக்க போட்டியில், பேராக், சிமோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் ஆறு அறிவியல் புத்தாக்க கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி சாதனைப் படைத்தனர்.
18 நாடுகளைச் சேர்ந்த 1,700 குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், சிமோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமைச் சேர்ந்தனர்.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ECO SCHOOLS திட்டத்தின் கீழ் வழங்கப்படும், மிக உயர்ந்த GREEN FLAG AWARD எனப்படும் சிறப்புமிக்க பசுமைக் கொடி விருதை, கெடா மாநிலத்தில் பெறும் முதல் தமிழ்ப்பள்ளியாக, சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
தீபகற்ப மலேசியாவைப் பொறுத்தவரை, இயற்கையோடு ஒன்றித்து, பசுமை திட்டத்தின் கீழ் உயரிய விருதைப் பெறும் இரண்டாவது தமிழ்ப்பள்ளியாகவும் இப்பள்ளி விளங்குகிறது.
இந்தோனேசியா, மேடானில் நடைபெற்ற உலக இளைஞர் அறிவியல் கண்டுபிடிப்பு புத்தாக்கப் போட்டியில் டான் ஶ்ரீ டத்தோ மாணிக்கவாசக தமிழ்ப்பள்ளி மாணவி யாழினி புகழேந்தி தங்க பதக்கமும் சிறந்த நிலைத்தன்மை விருதையும் வென்றுள்ளார்.
பிப்ரவரி 23 தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்த இவர், முகம் கழுவும் திரவத்தைக் கண்டுப்பிடித்து பெற்ற வெற்றியின் வழி சமுதாயத்திற்கு பெருமைத் தேடித் தந்துள்ளார்.
மாணவர்களின் சாதனைகளுக்கு இடையில், இந்தியா, ஒடிசா மாநிலம், புவனேஸ்பரர் நகரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது பிரவாசி பாரதிய டிவாஸ் மாநாட்டில், மஇகா-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான டான் ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கல்வி, தொழில்முனைவு, சுகாதாரம் மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் வகையில், நிதியுதவிகள், ஒதுக்கீடுகள் உட்பட பல்வேறு சமூக-பொருளாதார திட்டங்களின் மூலம் இந்திய சமூகத்திற்கான ஆதரவை, மலேசிய அரசாங்கம் இவ்வாண்டும் தொடர்ந்து வலுப்படுத்தியது.
இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்ட திட்டங்களுக்காக, மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, தெக்குன் மற்றும் தொடர்புடைய தொழில்முனைவோர் நிதிகளின், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் செயல்படும் மடானி அரசாங்கத்தின் கீழ் சுமார் 22 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீடுகள் கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் ஆதரவை உள்ளடக்கிய மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.
கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக நல்வாழ்வு நடவடிக்கைகள் என 34 சமூகத் திட்டங்களில் 10 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதியை செயல்படுத்துவதில் மித்ரா முக்கிய பங்கு வகித்தது.
அதுமட்டுமின்றி, இந்திய சிறுவர்களின் ஆரம்பக் கல்விக்கு உதவும் வகையில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டின் மூலம் ஏறத்தாழ 4,700 சிறார்கள் ஆரம்பக் கல்வியைப் பெறுவதற்கு வழிவகுத்தது.
அதனையடுத்து, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்காக ஒரு கோடி ரிங்கிட் நிதி வழங்கப்பட்ட வேளையில் சுமார் 2,000 நோயாளிகள் இதன் மூலம் பயனடைந்தனர்.
பொருளாதார ரீதியில், SPUMI, BRIEF-i, மற்றும் பெண் போன்ற திட்டங்கள் மூலம் விரிவாக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் விநியோகித்தார்.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய தொழில்முனைவோருக்கு குறிப்பாக பெண்களுக்கு, பல்வேறான உதவிகளையும் பயிற்சித் திட்டங்களையும் வழிவகுப்பதில், இன்றைய மனிதவள அமைச்சரான டத்தோ ஶ்ரீ ரமணன் பெரும் பங்கு வகித்தார்.
இம்முயற்சிகளின் வழி, மடானி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் தங்கள் வணிகங்களைத் தொடங்கவும் அவற்றை மேம்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.
அதோடு, 200 தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் பிரேத்தியேக வகுப்புகளை இலவசமாக வழங்கியதும் அரசாங்கத்தின் முயற்சிகளில் அடங்கும் வேளையில், உயர்க்கல்வியை தொடங்கிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம் உட்பட கல்வியிட வசதிகளும் இவ்வாண்டு மேம்படுத்தப்பட்டன. இவை நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகும்.
இந்திய சமூகத்தின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படுவதை ஊக்குவிக்கவும், மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நீண்டகால செழிப்பை மேம்படுத்தவும் அரசாங்கம் மற்றும் சமூகத் தலைவர்களின் தொடர்ச்சியான முயற்சியை இந்த ஒதுக்கீடுகளும் திட்டங்களும் பிரதிபலிக்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)