கொல்கத்தா, 29 டிசம்பர் (பெர்னாமா) -- இந்தியாவில் காலனித்துவ ஆட்சியின் சான்றாக கொல்கத்தாவில் உள்ள டிராம்கள் இன்னமும் செயல்பட்டு வருகின்றன.
கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில் பயணிக்கும்போது அதன் ஒலி பயணிகளை கவர்ந்திழுக்கும்.
ஆனால், அதன் சேவை தற்போது நிறைவு கட்டத்திற்கு வந்திருப்பதால் கொல்கத்தா மக்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
சாலைகளில் தண்டவாளங்கள் அமைத்து டிராம்கள் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களாகும்.
இவை பேருந்துகளைப் போலத் தோன்றினாலும், சாலைகளில் உள்ள மின் கம்பிகளிலிருந்து மின்சாரம் பெற்று தண்டவாளங்களில் பயணித்து அந்நகரின் போக்குவரத்திற்கு உதவுகின்றன.
இருப்பினும், கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசல் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் கடைசி டிராம் சேவை நிறுத்தப்படும் என்று மேற்கு வங்காளத்தின் போக்குவரத்து அமைச்சர் கடந்தாண்டு அறிவித்திருந்தார்.
1970-ஆம் ஆண்டுகளில் 52 வழித்தடங்களுடன் இயங்கிய இச்சேவை, 2015-ஆம் ஆண்டில் வெறும் 25-ஆகக் குறைக்கப்பட்டது.
தற்போது இரண்டு வழித்தடங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் அவையும் விரைவில் நிறுத்தப்படலாம் என்று உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்தனர்.
''நான் நிறைய மாற்றங்களைக் கண்டிருக்கிறேன். முதலாவதாக, 90-ஆம் ஆண்டுகளில் நான் முதன்முதலில் இணைந்தபோது, கொல்கத்தாவில் 340 டிராம்கள் இயங்கின. படிப்படியாக, அதன் எண்ணிக்கை 7-8 டிராம்களாகக் குறைந்துவிட்டது,'' என்று டிராம் ஓட்டுநரான பச்சு சித்தா கூறினார்.
''உலகளவில் 450க்கும் மேற்பட்ட நகரங்கள் டிராம் சேவையை தேர்வுசெய்து, அதை மீண்டும் கொண்டு வரும்போது, கொல்கத்தாவில் உள்ள நாங்கள் அதை சாக்கடையில் எறிந்துவிட்டு டிராம் சேவையை மேம்படுத்த மறுத்து, கொல்கத்தாவின் டிராம்கள் அழிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகிறோம்,'' என்று கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்கத்தின் உறுப்பினரான சாக்னிக் குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில், டிராம் சேவையை மீட்டெடுப்பதற்கும் அதனை பராமரிப்பதற்கும் உகந்த வழிகளை ஆராய ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]